Friday, July 26, 2019

குறிஞ்சியில் முல்லைப் பெண்!

-சந்திரா கார்த்திகேயன்-

ணி, அதிகாலை ஆறு தாண்டியிருந்தது.

நெடிது வளர்ந்து மலைத்து நிற்கும் மலைகளுக்கிடையில் பவ்வியமாய் படுத்துறங்கிக்கொண்டிருந்த மேகக் கூட்டங்கள் மெல்லிதாய் அசையும் அழகு உள்ளத்தில் ஆனந்தத்தை நிறைக்கிறது. மேகம் கரையக் கரைய இரவில் பூத்த முல்லைப் பூ மெதுவாய் தலைகாட்டுகிறது.

உண்மையில் இயற்கை எத்தனை அழகானது! அது அள்ளித்தரும் கொடை எத்தனை புதுமையானது!

ஒவ்வொரு விடியலும் புது இரத்தம் பாய்ச்சுவது போல அதிசயங்களைக் கொட்டுகிறதே? இரசனை உள்ளவர்களுக்கு இயற்கை ஓர் அட்சயம். அதிலும் மலையிடுக்குகளில், சிற்றருவியின் இசையோடு வாழ்தல் பெருந்தவம்.

இத்தனையும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் போது கைப்பேசி அழைப்பு கொடுத்தது.

“ஹலோ”
“நான் நிரோ” (கற்பனைப் பெயர் :))
“பெயர் விழுந்தது. சொல்லுங்கண்ணா”
“இன்னிக்கு ஒரு எசைமன்ட் இருக்கு. காலிக்குப் போகனும். முடியுமா?”
“நான் ஊருக்கு வந்திருக்கிறேன் ணா”
“பரவால்ல. இன்னைக்கு ஈவினிங் தான் போகனும். அங்க தங்கனும். நாளைக்கு ஃபுல் டே வர்க்ஷொப் இருக்கு. அது முடிய கொழும்புக்கு வரலாம்”
“என்ன வர்க்ஷொப் ணா”
“என்ன வார்த்தைக்கு வார்த்த அண்ணா, அண்ணானு சொல்றீங்க”
“சரி சொல்லுங்க”
“என்னையும் உங்களையும் போகச் சொல்லித்தான் பொஸ் சொன்னாரு. நீங்க ஈவினிங் இங்க வாங்க. போகலாம்”
“சரி அண்ணா, நான் பார்த்திட்டு கோல் பண்றேன்”
“கட்டாயம் வாங்க. சான்ஸ்ஸ மிஸ் பண்ணக் கூடாது. இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் ஒன் பிரின்ட் என்ட் வெப். நீங்க க்ரைம் ஸ்டோரிஸ் செய்றனால இது உதவியா இருக்கும்”
“ம்.. சரிண்ணா”

ஜன்னல்வழியே இயற்கை என்னை அழைத்துக்கொண்டிருந்தது. இலேசான பனி, ஒருவகையான வாசத்தோடு இடமிருந்து வலம் போய்க்கொண்டிருந்தது.

அந்த வாசம் முல்லைப் பூக்களால் பிரசவமானது.

மல்லிகை இனமாயினும் முல்லைக்குத் தனியிடம் உண்டு. எங்கள் வீட்டு முற்றம் முழுவதும் முல்லைப் பூக்கள் எப்போதுமே வரவேற்பதுண்டு. மல்லிகையில் தேனில்லை. முல்லையில் தேனுண்டு என்பார்கள்.

என் குழந்தைப் பராயத்தில் முல்லையை அக்குவேறாகப் பிரித்து ஆராய்ந்ததை மறக்கவே முடியாது.
என் எண்ண அலைகளையெல்லாம் ஒரு கோப்பை தேநீர் பறித்துவிட்டது.

என்ன வர்க்ஷொப்? அப்படி இதுவரை அறிவிக்கவில்லையே? அதுவும் இவரோடு நான் எப்படிச் செல்வது? பலகோணங்களில் சிந்தித்தேன். என் ஊடகத் தோழியர் பலருக்கு அழைப்பெடுத்துக் கேட்டேன்.
அப்படியொன்றும் இல்லை எனப் பதில் வந்தது.

அவ்வாறெனின், அண்ணனின் நோக்கம் என்ன? அவர் காதல் வயப்படுவதுபோலப் பேசும்போது விளையாட்டாக எடுத்துப் பதிலளித்ததை சாதகமாக எடுத்துக்கொண்டாரா?

ஒரே உணவை இருவரும் பகிர்ந்து உண்டதை, பொருள் மாற்றி எடுத்துக்கொண்டாரா? இப்படிப் பலதும் உருண்டோடுகின்றன.

மணி, ஏழு இருபதைக் காட்டியது.

அழைத்தே கேட்டுவிடலாம் என்ற முடிவோடு எண்களைத் தட்டினேன்.

“ஹலோண்ணா”
“சொல்லுங்க மா”
“வர்க்ஷொப் எங்க நடக்குது? யார் நடத்துறாங்க?”
“எனக்கும் தெரியாது. போவோம். நடக்கல னா வந்திருவோம். அவ்வளவு தானே? இதற்கு ஏன் டென்ஷன்?”
“தங்குறதெல்லாம்?”
“என்கூட தங்க தங்க மாட்டீங்களா? நைட் மட்டுந்தானே?”
“என்ன சொல்றீங்க?”
“பயப்படாதீங்க ஒன்னும் பண்ண மாட்டேன் டியர். இப்போ எனக்குத் தான் கொழும்பு நியூஸ் ரூம பொறுப்பு கொடுத்திருக்காங்க. தெரியும் தானே?”
“அதுக்கு?”
“யோசிச்சி முடிவெடுங்க. ஜர்னலிசம் னு வந்திட்டா... எல்லாத்தையும் எட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகனும்”

கைப்பேசியைத் தூக்கி கட்டிலில் எறிந்துவிட்டு, எஞ்சியிருந்த தேநீரை இரசித்து ருசித்தேன். இரசனைகளைத் தவறவிட்டுவிட்டால்... எப்போது? எங்கே இரசிப்பது?

பல முறை அழைப்பு- அண்ணாவிடமிருந்து!
நான் இறுதிவரை ஒத்துழைக்கவில்லை.
மறுத்து மறுத்திருந்தேன்.

அதனால் நான் மிகவும் நேசித்த ஊடகத் தொழிலையும் விடவேண்டியதாயிற்று.

என் இரசனை, இயற்கை மீதான காதல் அனைத்தையும் பொடியாக்கிப்போட்ட அழைப்பு அது. மறக்க நினைக்கிறேன் என்பதாலோ என்னவோ இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். நெஞ்சில் ஆறாத வடுக்களுடன்.

என்னைப் பெண்பார்க்க வந்தவர்கள் பலரும் என்னுடைய நிறத்தை வெறுத்தார்கள். நான் கவலைகொள்ளவில்லை. எனக்கான, எனக்கேயான காதல் எங்கேயாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்காதவளாக வாழ்ந்தேன்.

ஆனால் என் உடம்புக்கு ஆசைப்பட்டவனை அன்றுதான் பார்த்தேன். இத்தனை நாட்களும் இப்படியொரு நினைவோடுதான் என்னோடு பழகியிருக்கிறான் என நினைக்கும் போது வெந்துச் சிதைகிறது மனது!

ஆகட்டும்! இப்போது இந்த நிமிடத்தில் எந்தப் பெண் அவனுடைய வலையில் வீழ்ந்திருக்கிறாளோ யான் அறியேன்!

குறிஞ்சி மண்ணில் முல்லை வாசம் வீசுகிறது – ஆனால் இரசிப்பதற்கு என்னைத் தவிர யாருமில்லை தோழர்களே!

No comments:

Post a Comment